சீருடை அணிந்து பள்ளிக்குப் புறப்படத் தயாராக இருந்த ரேணுகா, பால்கனியில் தொப்பென்று வந்து விழுந்த செய்தித்தாளை ஓடிப்போய் எடுத்து வந்தாள். பப்ளிக் ஸ்கூல் கற்றுக் கொடுத்திருந்த பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று. பள்ளிக்குப் போகும் ஓட்டத்திலும் செய்தித்தாளை, ஓர் அவசரப் பார்வையாவது பார்க்காமல் இருக்க மாட்டாள் ரேணுகா. அன்றும் வழக்கம்போல் காலை உணவான சான்ட்விச்சைக் கடித்தவாறு, செய்தித்தாளை மேலெழுந்தவாரியாகப் பார்த்துக்கொண்டு வந்த ரேணுகா, திடீரென்று துள்ளிக் குதித்தாள்.
''அம்மா! அம்மா! சீக்கிரம் ஓடி வா! அமெரிக்காவிலிருந்து அப்பா வரப் போகிறார்!'' என்று ஒரே உற்சாகமாகக் கத்தினாள்.
மகளின் குரலைக் கேட்டு, கைவேலையை விட்டு, ஓடி வந்த டாக்டர் ஸெளம்யாவிடம், செய்தித்தாளின் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த அந்தச் செய்தியை உரக்கப் படித்துக் காண்பித்தாள் ரேணுகா.
''அடுத்த வாரம் புதுதில்லி விஞ்ஞான பவனில் நடக்கவிருக்கும் அகில உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகாநாட்டில், பிரபல விஞ்ஞானி டாக்டர் மோஹன்ராம் கலந்து கொள்ளவிருக்கிறார். அமெரிக்க பிரஜையாகிவிட்ட இந்த இந்திய விஞ்ஞானி, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இந்தியாவுக்கு வருகிறார்.''
செய்தியைக் கேட்ட டாக்டர் ஸெளம்யா நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டாள்.
''வாட் எ சர்ப்ரைஸ்! நான் கூடிய சீக்கிரமே அப்பாவைச் சந்திக்கப் போகிறேன்!'' என்று ஆர்ப்பரித்தவாறு, தான் பத்தாம் வகுப்பில் படிக்கும் பதினைந்து வயதுப் பெண் என்பதையெல்லாம் மறந்து, சிறு குழந்தையைப் போல் தாயாரைக் கட்டிப்பிடித்து, கன்னத்தில் செல்ல முத்தம் ஒன்றைப் பதித்தாள் ரேணுகா.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான தன் தந்தையை முதன்முதலாகச் சந்திக்கப் போவதைப் பற்றிய உற்சாகத்தில், ஸ்கூல் பஸ்ஸைக் கோட்டைவிட்டுவிடப் போகிறோமே என்று ரேணுகா ஒரே ஓட்டமாக ஓடிப் போய் பஸ்ஸைப் பிடித்தாள்.
டாக்டர் மோஹன்ராம் - டாக்டர் ஸெளம்யா திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். திருமணத்தின் பொழுது மோஹன்ராம் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், டாக்டர் ஸெளம்யா மகப்பேறு மருத்துவ நிபுணராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். மோஹன் ராமின் புத்தி கூர்மையையும், அறிவாற்றலையும் கண்டு ஸெளம்யாவிற்குக் கணவனின் மேல் அளவிட முடியாத மதிப்பும், பிரமிப்பும் உண்டாயிற்று. இப்படிப்பட்ட அறிவாளியைக் கணவனாக அடையத் தான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள்.
ஆனால் நாளாக ஆக, அறிவு ஜீவிகளுக்கே உரிய பல வக்கிரங்களும், தன் கணவனுக்கு இருப்பது ஸெளம்யாவுக்குப் புரிய ஆரம்பித்தது. எப்பொழுதும், புத்தகமும் கையுமாக உட்கார்ந்து தீவிர சிந்தனையில் மூழ்கிவிடும் தன் கணவன், ஸ்திர புத்தியில்லாத மனிதனாக இருப்பது வேதனையளித்தது. பல விஷயங்களில் க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம் என்று மோஹன்ராம் நடந்து கொள்வது, அவளுக்குக் கவலையளித்தது.
திருமணமாகி ஒரு வருட காலத்திற்குள் கணவனை நன்கு அறிந்து கொண்டிருந்த ஸெளம்யாவுக்கு, அவள் ரேணுகாவை உண்டாகியிருக்கும் சமயத்தில் மோஹன்ராம் திடீரென்று தன் ஐ.ஏ.எஸ். வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தது ஆச்சர்யமளிக்கவில்லை.
பௌதிகப் பட்டதாரியான தனக்கு ஐ.ஏ.எஸ். வேலை திருப்தியளிக்கவில்லை என்றும் அமெரிக்காவிற்குப் போய் ஆராய்ச்சி பண்ணிப் பெரிய விஞ்ஞானியாகப் போவதாகவும், மோஹன்ராம் அறிவித்தான். எப்படியும் தன் சொல் எடுபடாது என்பது தெரிந்திருந்த ஸெளம்யாவும், கணவனின் இலட்சியத்திற்குக் குறுக்கே நிற்காமல் சந்தோஷமாகவே கணவனுக்கு விடை கொடுத்தனுப்பினாள்.
ஸெளம்யாவை நிறைமாத கர்ப்பிணியாக விட்டுச் சென்ற மோஹன்ராம், அவளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக ஸெளம்யாவின் தந்தை எழுதிய கடிதத்திற்கு வந்த பதிலே, மோஹன்ராமிடமிருந்து முதலும், கடைசியுமாக வந்த கடிதம். விஞ்ஞான ஆராய்ச்சியில் தீவிரமாக மூழ்கிவிட்ட தனக்குக் குடும்ப வாழ்க்கையில் நாட்டமில்லை என்றும், வேண்டுமானால் ஸெளம்யாவுக்குச் சட்ட ரீதியாக விவாகரத்து வழங்கி, ஜீவனாம்சமும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், நிர்த்தாட்சண்யமாக எழுதிவிட்டான், மோஹன்ராம்.
தன் கணவன் ஸ்திர புத்தியில்லாத மனிதர் என்பது தெரிந்திருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பான் என்று ஸெளம்யா கனவிலும் நினைக்கவில்லை. மோஹன்ராமின் கடிதத்தால் அதிர்ந்து போன இரு தரப்புப் பெற்றோர்களும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், மோஹன்ராம் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
அடிபட்டுப் போன ஸெளம்யா தனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டு, தன் கவனத்தை ரேணுகாவை வளர்ப்பதிலும், மருத்துவத் தொழிலிலும் திருப்பிக் கொண்டாள். மறு மணத்தைப் பற்றிய எண்ணம் துளிக்கூட இல்லாததால், சட்டப்படி விவாகரத்து பெறுவதைப் பற்றி அவள் கவலைப்படவில்லை.
ஸெளம்யாவின் பராமரிப்பில் வளர்ந்த குழந்தை ரேணுகா, நன்றாகப் பேசத் தெரிந்த உடன் கேட்ட முதல் கேள்வியே, ''என்னோட ஃப்ரண்ட் ரவி, மாலா எல்லாருக்கும் அப்பா இருக்காரே? எனக்கு மட்டும் ஏன் அப்பாவே இல்லை'' என்பதுதான்.
''உனக்கு அப்பா இல்லை என்று யார் சொன்னது? உன்னோட அப்பா அமெரிக்காவிலே இருக்கார்'' என்று மகளுக்குச் சொல்லிக்கொடுத்தாள் ஸெளம்யா.
அவ்வளவுதான்! அன்றையிலிருந்து ரேணுகா எல்லோரிடமும் மிகவும் பெருமையாக, ''என்னோட அப்பா, அமெரிக்கா....ல இருக்கார்'' என்று பெரியதாக நீட்டி, கையை உயரே தூக்கிச் சொல்ல ஆரம்பித்தாள்.
கணவனுடன் சேர்ந்து வாழாவிட்டாலும், ஸெளம்யா குழந்தை ரேணுகாவிடம் கூடியவரையில் அவள் தந்தையைப் பற்றிய நல்ல விஷயங்களையே கூறி வந்தாள். அதனால்தான் ரேணுகாவுக்குத் தன் சிநேகிதிகளின் பெற்றோர்களைப் போல் தன் தாயும், தந்தையும் சேர்ந்து வாழவில்லையே என்ற குறை உள்ளூர இருந்தாலும், தந்தையின் மேல் ஒருபொழுதும் வெறுப்பு உண்டாகவில்லை.
ரேணுகாவுக்கு, தந்தையின் மேல் அளவிட முடியாத மதிப்பும், அவரைக் காண வேண்டும் என்ற ஆவலும் முதல்முதலாக ஏற்பட்டது, அவளுக்குப் பத்து வயதான பொழுதுதான். வீட்டிற்கு அருகில் இருந்த நர்ஸரிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து முடித்திருந்த ரேணுகாவை, தில்லியிலேயே அதிகப் பிரசித்தி பெற்ற பப்ளிக் ஸ்கூல் ஒன்றில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றாள் ஸெளம்யா.
அட்மிஷனுக்கு ஏகப்பட்ட போட்டா போட்டியிருந்தும், ரேணுகா மோஹன்ராமின் மகள் என்றவுடன் பிரின்ஸ’பால் துளிக்கூட யோசிக்காமல், உடனே அவளுக்கு இடம் கொடுத்துவிட்டார். அதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய அறையில் மாட்டியிருந்த புகழுக்குரிய மாணவர்களின் பட்டியலைக் காண்பித்து,
''இதோ பார்! இந்தப் பள்ளியில் படித்து மாகாணத்திலேயே முதன்மையாகத் தேறியவர்களின் பட்டியலில், உன்னுடைய தந்தையின் பெயரை! மோஹன்ராம் இந்தப் பள்ளிக்கே பெருமை தேடித் தந்த அதிபுத்திசாலியான மாணவன். நீயும் உன் தந்தையைப் போல் நன்றாகப் படித்து இந்த பள்ளிக்குப் புகழ் தேடித் தர வேண்டும்'' என்று சிறுமி ரேணுகாவிடம் உற்சாகமாகப் பேசினார், பிரின்ஸ’பால்.
ஆம்! தானும் தன் தந்தையைப் போல் முதன்மையாகத் தேற வேண்டும் என்ற எண்ணமும், தந்தையிடம் தன்னை அறியாமல் ஓர் ஈர்ப்பும் அன்றைய தினத்திலிருந்து அச்சிறுமியின் மனத்தில் உண்டாயிற்று.
பிரின்ஸ’பால் கூறியது போலவே, மோஹன்ராமின் காலத்திலிருந்து அப்பள்ளியில் பணியாற்றி வரும் எல்லா ஆசிரியர்களும், சிறுமி ரேணுகாவிடம் அவள் தந்தையின் திறமைகளைப் பற்றிச் சமயம் வாய்க்கும்போதெல்லாம் எடுத்துரைத்தார்கள். பள்ளிகளுக்கிடையே நடந்த பட்டிமன்றங்களிலாகட்டும், க்விஸ் போட்டிகளிலாகட்டும் மோஹன்ராம் பரிசுகளைத் தட்டிக்கொண்டு வரத் தவறியதில்லை என்று அவனைப் பற்றிப் பெருமையுடன் நினைவு கூர்வார்கள். இவற்றையெல்லாம் கேட்கக் கேட்க ரேணுகாவுக்கு, தானும் தன் தந்தையைப் போல் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று.
''டீன் ஏஜ்'' பெண்ணாக வளர்ந்து, பத்திரிகைகளும், செய்தித்தாள்களும் படிக்கத் துவங்கிய பிறகு, மோஹன்ராமைப் பற்றியும், அவருடைய கண்டுபிடிப்புகளைப் பற்றியும் படிக்க நேரும்பொழுது ரேணுகா புல்லரித்துப் போவாள்! எப்படிப்பட்ட அறிவு ஜீவி என் தந்தை! அவருடைய மகளாகப் பிறக்கத் தான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று பரவசமடைவாள் ரேணுகா.
சென்ற ஆண்டு தில்லியில் நடந்த உலகப் புத்தகக் கண்காட்சிக்குத் தன் தாயுடன் சென்றிருந்த ரேணுகா, அங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த டாக்டர் மோஹன்ராம் எழுதய புத்தகத்தைக் கண்டு ஒரேயடியாகக் குதிக்க ஆரம்பித்துவிட்டாள். இருநூற்றைம்பது ரூபாய் விலையுள்ள அப்புத்தகத்தை வாங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.
ரேணுகாவின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட ஸெளம்யாவும், மகளின் ஆசையை நிறைவேற்றி வைத்தாள். அப்புத்தகம் ரேணுகாவின் வயதிற்கும், விஞ்ஞான அறிவிற்கும் அப்பாற்பட்டதாக இருந்தாலும், ரேணுகா அதைப் பத்திரமாகத் தன் புத்தக அலமாரியில் வைத்திருந்து தன்னுடைய நெருங்கிய தோழிகளிடம், தன் தந்தை எழுதிய புத்தகம் என்று காண்பித்து மகிழ்ந்து போனாள்.
பஸ் ஒரு குலுக்கலுடன் பள்ளியின் எதிரில் நின்ற உடன், இன்பமயமான கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ரேணுகா, சட்டென்று விழித்துக்கொண்டு வகுப்பை நோக்கித் துள்ளல் நடை போட்டாள். லஞ்ச் இடைவேளையின்போது தன் தோழிகளிடம், அடுத்த வாரம் தன் தந்தை வரப்போகும் பெருமையை அளக்கத் தவறவில்லை.
பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும் போதும், வழிநெடுகிலும் தன் தந்தையை விமான நிலையத்தில் சந்திக்கப் போவதையும், ஓடிப்போய் அவருடைய நீட்டிய கரங்களுக்குள் தஞ்சம் புகுந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் தான் திளைக்கப் போவதையும் கற்பனை செய்தவாறு, மாடிப்படிகளைத் தாவி ஏறிய வண்ணம் வீட்டிற்குள் நுழைந்தாள் ரேணுகா.
பள்ளியிலிருந்து திரும்பிய மகளிடம், ஸெளம்யா, அன்றையத் தபாலில் வந்திருந்த வெளிநாட்டுக் கடிதம் ஒன்றை நீட்டினாள். உறையின் மேல் தந்தையின் பெயரைப் பார்த்த உடனே, ஒருவித பரபரப்புடன் உறையிலிருந்து கடிதத்தை எடுத்து அவசர அவசரமாகப் படிக்க ஆரம்பித்தாள் ரேணுகா.
அன்புள்ள ஸெளம்யாவுக்கு,
மகாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அடுத்த வாரம் நான் தில்லிக்கு வருகிறேன். தில்லி அசோகா ஹோட்டலில் தங்குவதாக ஏற்பாடு. நீயோ, உன் மகளோ, என்னைச் சந்திக்க விரும்பினால், மாலை வேளைகளில் ஹோட்டலில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
இப்படிக்கு,
மோஹன்ராம்.
கடிதத்தைப் படித்த ரேணுகா ஏமாற்றம் தாங்காமல் ஓர் ஆயாசத்துடன் சோபாவில் சாய்ந்துவிட்டாள். இந்த உணர்ச்சியற்ற கடிதத்திற்காகவா, அவள் இத்தனை ஆவலுடன் காத்திருந்தாள்!
''நீயோ, உன் மகளோ என்னைச் சந்திக்க விரும்பினால்....''
அப்படியானால் தன்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசையோ, ஆவலோ அவருக்குத் துளிக்கூட இல்லையா? அப்படி நம் மேல் உண்மையான பாசமோ, அன்போ இல்லாத அந்தத் தந்தையைப் போய்ப் பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? என்று நினைக்க ஆரம்பித்தாள்.
எந்தத் தந்தையைக் காண வேண்டும் என்று அவள் நினைவு தெரிந்த நாளிலிருந்து ஏங்கினாளோ, அவர் மனித உணர்ச்சியற்ற ஓர் இயந்திரம், என்பது புரிந்து போன ரேணுகா, அவருக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணத் தொடங்கினாள்.
இத்தனை காலம் தந்தையைப் பற்றி உயர்வாகவே கனவு கண்டு கொண்டிருந்த ரேணுகாவுக்கு, தான் தந்தையைப் போல் பெரிய விஞ்ஞானியாகவோ அறிவு ஜீவியாகவோ உருவாவதைவிடப் பாசமும், அன்பும் கொண்ட ஜீவனாக வளருவதே மேல் என்ற உண்மை நிதர்சனமானது.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
hi
ennanga vara vara niraya kadai ellam podareenga?? munnadi pota kadai mudinjicha??? idu engernthu G3 pannunathu?
nice one nalla ezhuthiyirukeenga
Good one!!!
super kadhainga....keep writing...
Nalla eluthuringa.
-Manic
Nicely written. konjam lenghtha korachu irukalaamo..? :)
Post a Comment